< Back
தேசிய செய்திகள்
பார்சலில் வந்த ஹேர் டிரையர் கருவி; வெடித்து சிதறி பெண்ணின் கை விரல்கள் துண்டான விபரீதம்
தேசிய செய்திகள்

பார்சலில் வந்த ஹேர் டிரையர் கருவி; வெடித்து சிதறி பெண்ணின் கை விரல்கள் துண்டான விபரீதம்

தினத்தந்தி
|
20 Nov 2024 8:22 PM IST

ஹேர் டிரையர் கருவி வெடித்து சிதறியதில் பெண்ணின் கை விரல்கள் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட் நகரில் உள்ள இல்கல் பகுதியைச் சேர்ந்தவர் பசம்மா யரணால். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த இவரது கணவர் பாபண்ணா யரணால், கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். பசம்மாவின் தோழி சசிகலா என்பவரது முகவரிக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. சசிகலாவின் கணவரும் ராணுவத்தில் பணிபுரிந்து உயிரிழந்தவர் ஆவார்.

இந்நிலையில், பார்சல் வந்தபோது சசிகலா ஊரில் இல்லாததால், அந்த பார்சலை வாங்கி வைக்குமாறு அவர் பசம்மாவிடம் கூறியிருக்கிறார். இதன்படி பசம்மா அந்த பார்சலை வாங்கி, வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது அதில் ஹேர் டிரையர் கருவி இருந்துள்ளது. அந்த ஹேர் டிரையர் கருவியை சோதித்து பார்ப்பதற்காக பசம்மா அதன் வயரை ஸ்விட்ச் போர்டில் இணைத்து ஆன் செய்தபோது, அந்த கருவி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் பசம்மாவின் இரண்டு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. அவரது கை விரல்கள் துண்டாகி தரையில் விழுந்துள்ளன. வீடு முழுவதும் ரத்தம் தெறித்து, வலியால் பசம்மா அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, பசம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின்போது, முதலில் ஹேர் டிரையர் கருவியை ஆர்டர் செய்ததாக கூறிய சசிகலா, பின்னர் அந்த கருவியை ஆர்டர் செய்யவில்லை என முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இது குறித்து பாகல்கோட் எஸ்.பி. அமர்நாத் ரெட்டி கூறுகையில், "பசம்மாவின் தோழி சசிகலா, பயம் காரணமாக இவ்வாறு மாற்றி பேசியதாக தெரிகிறது. அந்த ஹேர் டிரையர் கருவி சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்