வெள்ளத்தில் மூழ்கிய கார்: 2 மணி நேரம் சிக்கி தவித்த தம்பதி - வைரல் வீடியோ
|நான்கு பக்கமும் ஓடும் தண்ணீரால் கார் சூழ்ந்திருந்தாலும் அந்த தம்பதியினர் எந்தவித பதட்டம் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
காந்திநகர்,
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காரின் மேற்கூரையில் தம்பதிகள் இருவர் சிக்கித் தவிப்பதைக் காட்டும் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கரோல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்க, ஆபத்தை உணராமல் அந்த வழியாக வந்த தம்பதிகளின் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் எப்படியோ முயற்சி செய்து பாதுகாப்பாக இருக்க தங்கள் காரின் கூரையில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.
நான்கு பக்கமும் வேகமாக ஓடும் தண்ணீரால் கார் சூழப்பட்டிருந்தாலும், தம்பதியினர் எந்தவித பதட்டமும் இல்லாமல் அமைதியாக மீட்புபடை வரும் வரை அங்கேயே காத்திருந்தனர். சுற்றிலும் ஆபத்து சூழ்ந்திருக்க சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த பின்பு, இருவரும் செப்டம்பர் 8-ம் தேதி பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.
அபிஜீத் எம்1999 என்ற பெயர் கொண்ட பயனரால் பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. "குஜராத்தில் உள்ள சபர்கந்தாவிலிருந்து ஒரு பயங்கரமான வீடியோ வெளிவந்துள்ளது. ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் தம்பதிகள் இருவர் சிக்கினர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இருவரும் காரின் மேல் ஏறி அமர்ந்து கொண்டனர். கடும் முயற்சிக்கு பின் அவர்கள் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டனர்" என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த தம்பதிகள் எந்த பயமும் இல்லாமல் ஏதோ வீட்டில் அமர்ந்திருப்பது போல் எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்று சமூகதளவாசிகள் வியப்படைந்தனர். "இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. ஆனால் இந்த தம்பதியர் உயிரோடு மீட்கப்பட்டது ஒரு நல்ல செய்தி. வெள்ளத்தின் போது பாதுகாப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு நினைவூட்டல்" என ஒருவர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர்கள் மிகவும் நிதானமாக இருக்கிறார்கள். இதுவே மற்றவர்களாக இருந்தால் நிச்சியம் வெள்ளத்தை பார்த்து பீதியடைந்திருப்பார்கள் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பலர் அவர்களின் அமைதியைப் பாராட்டினாலும், மழைக்காலத்தில் இதுபோன்ற ஆபத்தான இடங்களைத் தவிர்ப்பது முக்கியம் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.