குஜராத்: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலையில் இருந்து விலக விரல்களை வெட்டிக் கொண்ட நபர்
|குஜராத்தை சேர்ந்த நபர் வேலையில் இருந்து விலகுவதற்காக தனது விரல்களை தானே வெட்டிக்கொண்டுள்ளார்.
காந்திநகர்,
ஊழியர்கள் வேலையை விட்டு விலகுவதற்கு பொதுவாக உடல்நலம், குடும்ப பிரச்சினை, பொருளாதார சூழல் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சொல்வது வழக்கம். ஆனால், குஜராத்தில் ஒரு நபர் தனக்கு பிடிக்காத ஒரு வேலையில் இருந்து விலகுவதற்கு தனது விரல்களை வெட்டிக் கொண்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தை சேர்ந்தவர் மயூர் தராபரா(32). இவர் கடந்த 8-ந்தேதி போலீசாரிடம் அளித்த புகாரில், அம்ரோலி பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துவிட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது தனது இடது கையில் 4 விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், மாந்திரீகம் உள்ளிட்ட காரணங்களுக்காக விரல்களை யாராவது வெட்டி எடுத்துச் சென்றிருப்பார்களா? என சந்தேகித்தனர். ஆனால் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து ஆய்வு செய்தபோது, மயூர் தராபரா தனது விரல்களை தானே வெட்டிக் கொண்டார் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் மயூர் தராபராவை அழைத்து விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மயூர் தராபரா தனது உறவினர் ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். அந்த வேலை அவருக்கு பிடிக்காத நிலையில், வேலையை விட்டு விலகுவது குறித்து தனது உறவினரிடம் கூற அவருக்கு தைரியம் வரவில்லை. எனவே, விரல்களை வெட்டிக் கொண்டு தன்னை கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு தகுதியற்றவராக மாற்றிக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்ததாக போலீசாரிடம் மயூர் தராபரா கூறியுள்ளார்.
இதற்காக புதிய கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு, 8-ந்தேதி இரவு அம்ரோலி வட்ட சாலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று தனது விரல்களை மயூர் வெட்டியுள்ளார். ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக முழங்கை அருகே கயிற்றை இறுக்கமாக கட்டியுள்ளார். பின் வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் கத்தியை ஒரு பையில் போட்டு தூக்கி வீசியுள்ளார்.
பின்னர் தனது நண்பர்களை அழைத்து, தன்னுடைய விரல்களை யாரோ வெட்டிவிட்டதாக மயூர் தராபரா கூறியிருக்கிறார்கள். அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மயூர் தராபரா கூறியபடி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், அங்கு ஒரு பையில் வெட்டப்பட்ட விரல்கள் மற்றும் ஒரு கத்தியை கண்டெடுத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.