அரசியலை விட்டு அமித்ஷா வெளியேற வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்
|அமித் ஷாவுக்கு, பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
பாட்னா,
மாநிலங்களவையில், அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "இப்போது அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது பேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்று அவர் கூறினார். அமித்ஷா கூறிய இந்த கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், "அமித்ஷாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும். அம்பேத்கர் மீது அமித்ஷாவுக்கு வெறுப்பு இருந்திருக்க வேண்டும். அவருடைய இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கடுமையாக விமர்சித்து, அவரும் அவரது கட்சியும் அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டி இருந்தார்.