< Back
தேசிய செய்திகள்
மின்சார ரெயிலில் பெண் ஆபாச நடனம்
தேசிய செய்திகள்

மின்சார ரெயிலில் பெண் ஆபாச நடனம்

தினத்தந்தி
|
30 May 2024 2:07 PM IST

மின்சார ரெயிலில் ஆபாச நடனம் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

சமீபகாலமாக மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் ஆபாச, அநாகரிகமான வீடியோக்களை எடுத்து பொது மக்களுக்கு சிலர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இணையதளத்தில் பிரபலமாக வேண்டும் என அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளன.

இந்த நிலையில் மும்பையில் மின்சார ரெயில் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒரு வீடியோவில் பெண் ஒருவர் போஜ்புரி பாடலுக்கு மின்சார ரெயிலில் நடனமாடுவது போல உள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பயணி ஒருவர், " மும்பையில் மின்சார ரெயிலில் பயணிகள் ஒரு போதும் நிம்மதியாக பயணம் செய்ய முடியாது. வியாபாரிகள், பிச்சைக்காரர்கள் வரிசையில் தற்போது 'ரீல்ஸ்' எடுப்பவர்கள். இதுபோன்ற தொல்லைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். " என கூறியுள்ளார்.

இதேபோல பலர் வீடியோ எடுக்கிறோம் என்ற பெயரில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் பொது இடங்கள், மின்சார ரெயில் போன்ற பொது வாகனங்களில் ஆபாச, அநாகரிக செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பயணியின் வீடியோ பதிவில் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மும்பை ரெயில்வே கோட்ட மேலாளர், மும்பை ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே போலீசாரும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்