ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
|ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 55-வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கவுன்சில் கூட்டத்தில், ஆயுள், மருத்துவக் காப்பீடு மீதான வரியை குறைக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி மாதம் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்களில் இருந்து காக்கும் ஜீன் தெரப்பி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படுகிறது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு பிரீமியம் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜி.எஸ்.டி. வரியும் இல்லை. அதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி உண்டு.
சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்கப்படுகிறது. விமானங்களுக்கான எரிபொருள் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் வரவில்லை. விமான எரிபொருளை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் நிராகரித்தன. விமான எரிபொருள்(ATF) மீது மாநிலங்கள் தொடர்ந்து வாட் வரி விதிக்கும்.
சிறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி.யும் இல்லை. உணவு டெலிவரி சேவை மீது ஜி.எஸ்.டி. விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை."
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.