சிறையில் இருந்து விடுதலையானதை கொண்டாட பேரணி சென்ற ரவுடி... மீண்டும் சிறையில் அடைப்பு
|சிறையில் இருந்து விடுதலையானதை கொண்டாட பேரணியாக சென்ற ரவுடியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹர்ஷத் பதாங்கர், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி ஹர்ஷத் பதாங்கர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து ரவுடி ஹர்ஷத் பதாங்கர் விடுதலையானதை கொண்டாடுவதற்காக சிறைக்கு வெளியே திரண்ட அவரது ஆதரவாளர்கள், சுமார் 15 இருசக்கர வாகனங்களில் அவரது காரை பின்தொடர்ந்து பேரணியாக சென்றனர். காரில் சென்றவாறு தனது ஆதரவாளர்களை நோக்கி ஹர்ஷத் பதாங்கர் கையசைத்தார்.
இந்த காட்சிகளை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், இது போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக ரவுடி ஹர்ஷத் பதாங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.