< Back
தேசிய செய்திகள்
பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த கும்பல்
தேசிய செய்திகள்

பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த கும்பல்

தினத்தந்தி
|
14 Dec 2024 7:36 PM IST

பீகாரில் ஆசிரியரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் பெகுர்சராய் மாவட்டத்தை சேர்ந்தவர் அவ்னீஷ் குமார். இவர் சமீபத்தில்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று கதிகார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணி நியமனம் பெற்றார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி சென்று கொண்டிருந்த அவ்னீஷ் குமாரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் அவ்னீஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அவ்னீஷ் குமாரை அழைத்து சென்று குன்ஜன் என்ற இளம்பெண்ணுடன் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. திருமணம் முடிந்த கையோடு, மணமகள் குன்ஜன், தனது கணவர் அவ்னீஷ் குமாரின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவ்னீஷ் குமாரின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில், இது குறித்து குன்ஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தானும், அவ்னீஷ் குமாரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது குறித்து தனது பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கிய பிறகு அவ்னீஷ் குமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், தனக்கு நீதி வழங்க போலீசார் உதவ வேண்டும் என்றும் குன்ஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயம் அவ்னீஷ் குமார் தரப்பில் போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தனக்கு அந்த பெண்ணுடன் எந்த தொடர்பும் இருந்தது இல்லை எனவும், அந்த பெண்தான் தன்னை பின்தொடர்ந்து மீண்டும், மீண்டும் தொலைபேசி மூலம் பேசி தொல்லை கொடுத்து வந்தார் என்றும் கூறியிருக்கிறார். அதோடு, தனக்கு நடந்த திருமணம் கட்டாயத்தின்பேரில் நடந்ததாகவும், தன்னை கடத்தி சென்று திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிகாரில் 'பகட்வா விவாஹ்' என்ற பெயரில், திருமணமாகாத இளைஞர்களை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அதிலும் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் துப்பாக்கி முனை திருமணம் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்