சுதந்திர தின உரையில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி
|வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சாதியவாதமும் சமூகத்திற்கு கேடாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- எப்போதும் எதிர்மறை எண்ணத்துடன் செயல்பட்டு நாட்டில் நிலையற்ற தன்மை உருவாக்கும் சதியுடன் செயல்படும் சிலரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேண்டியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் சாதியவாதமும் சமூகத்திற்கு கேடாக உள்ளது. இத்தகைய அரசியலில் இருந்து நாம் விடுபட வேண்டும்" என்றார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு, எதிர்க்கட்சிகளை மறைமுகமாக சாடுவதாக அமைந்து இருந்தது.
முன்னதாக பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்றார்.