பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றவரின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய நண்பர்
|பேஸ்புக் லைவ் வீடியோவை பார்த்து நண்பர் அளித்த தகவல் மூலம், தற்கொலைக்கு முயன்றவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பாக்ரு பகுதியைச் சேர்ந்த பவண் என்ற நபர், நேற்றைய தினம் அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வாடைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், தனது ஓட்டல் அறையில் இருந்தவாறு நேற்று இரவு பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய பவண், சிறிது நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
இந்த லைவ் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர் ஒருவர், உடனடியாக இது குறித்து ஜெய்ப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பவணின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், நேராக அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பவண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு தயாராகிக் கொண்டு இருந்துள்ளார்.
அவரது தற்கொலை முயற்சியை போலீசார் சரியான நேரத்தில் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். பேஸ்புக் லைவ் வீடியோ மூலம் இந்த தற்கொலை முயற்சி குறித்து தெரிந்து கொண்டு பவணின் நண்பர் சரியான நேரத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.