< Back
தேசிய செய்திகள்
சனாதன தர்மத்தை மதிக்காதவர்களுக்கு பதிலடி: மராட்டிய மாநிலத்தில் பவன் கல்யாண் பிரசாரம்
தேசிய செய்திகள்

சனாதன தர்மத்தை மதிக்காதவர்களுக்கு பதிலடி: மராட்டிய மாநிலத்தில் பவன் கல்யாண் பிரசாரம்

தினத்தந்தி
|
17 Nov 2024 9:13 PM IST

சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள், அதை மதிக்காதவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பவன் கல்யாண் பேசினார்.

சந்திரபூர்:

மராட்டிய மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பல்லார்பூரில் இன்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மகாயுதி வேட்பாளரும், பா.ஜ.க. தலைவருமான சுதிர் முங்கண்டிவாரை ஆதரித்து ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பேசியதாவது:-

பழைய நகர மக்கள் (ஐதராபாத்) எப்போதும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் பண்டிகைகளை விமர்சிக்கிறார்கள். சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் மத வேறுபாடின்றி அனைவரையும் மதிக்கிறார்கள். இருப்பினும், சனாதன தர்மத்தை மதிக்காதவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

சத்ரபதி சிவாஜி மற்றும் பால் தாக்கரே ஆகியோரின் உத்வேகத்தால் எனது கட்சி நிறுவப்பட்டது. நான் இங்கு வந்திருப்பது வாக்குகளுக்காக அல்ல. மராட்டிய மாநிலம் மற்றும் சனாதன தர்மத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்.

இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. இதை மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றுவதற்கு மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் முயற்சி செய்துவருகிறது. இந்த முன்னேற்றப் பயணம் நின்றுவிடக் கூடாது. சரியான வேட்பாளரை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்லார்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ்சிங் சந்தன்சிங் ராவத்தை எதிர்த்து முங்கண்டிவார் போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்