திருவனந்தபுரம்: இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தம்
|திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆராட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான ஐப்பசி மாத ஆராட்டு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று 9-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு பள்ளி வேட்டை நடந்தது. 10-ம் திருவிழாவான இன்று ஆராட்டு நடக்கிறது.
இதனையொட்டி மாலை 5 மணிக்கு கோவிலில் மேற்கு நடையில் இருந்து பத்மநாபசாமி, நரசிங்க மூர்த்தி, திருவம்பாடி கிருஷ்ணசாமி ஆகிய விக்ரகங்களுடன் யானைகள், குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து செல்ல ஆராட்டு ஊர்வலம் புறப்படும். இரவு 7 மணிக்கு சங்கு முகம் கடற்கரையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டுக்கு பிறகு சாமி ஊர்வலம் மீண்டும் கோவிலுக்கு வந்து சேரும்.
மேலும் ஆராட்டு ஊர்வலம் செல்வதற்கு வசதியாக இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலைய ஓடு பாதை மூடப்படும். இந்த 5 மணி நேரமும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம் விமான நிலையம் கடந்த 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே ஆறாட்டு ஊர்வலம் தற்போது விமான நிலையத்தின் ஓடுபாதை உள்ள பகுதி வழியாகத்தான் சென்றது. எனவே பாரம்பரியமாக நடைபெறும் ஊர்வலத்தின் பாதையை மாற்ற வேண்டாம் என்பதற்காகவே ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.