< Back
தேசிய செய்திகள்
விமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை
தேசிய செய்திகள்

விமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை

தினத்தந்தி
|
22 July 2024 10:33 AM IST

மராட்டியத்தின் மும்பையில் கனமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் விமான போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் கனமழையால் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட காரணங்களால், விமான பயணிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் தன்னுடைய பயணிகளுக்கு சலுகை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, நேற்று (ஞாயிற்று கிழமை) பயணம் செய்வதற்காக விமான முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, முழு கட்டண தொகையும் திரும்ப பெற்று கொள்ள வசதி தரப்பட்டு உள்ளது. அல்லது வேறு ஒரு நாளில் அவர்கள் பயணிப்பதற்காக முன்பதிவு செய்து கொள்ள ஒரு முறை சலுகை வசதியும் அளிக்கப்பட்டு உள்ளது.

விமான பயணிகளின் வசதிக்காக https://airindia.com/in/en/manage/flight-status.html என்ற இணைப்பு ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதுதவிர, தொடர்பு கொள்வதற்காக 011 69329333, 011 69329999 என்ற தொலைபேசி எண்ணையும் தந்துள்ளது.

மும்பையில் கனமழையை முன்னிட்டு, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அனைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

உணவு, மருந்து மற்றும் நிவாரண பொருட்கள் கையிருப்பு ஆகியவற்றை தேவையான அளவுக்கு பராமரிக்கும்படியும், மக்கள் மற்றும் கால்நடைகளுக்காக தற்காலிக நிவாரண முகாம்களை அமைக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்