பிளாஷ்பேக் 2023: நாட்டையே பதைபதைக்க வைத்த உத்தரகாண்ட் சுரங்க விபத்து..!
|ஒட்டுமொத்த இந்திய மக்களையும் 17 நாட்களுக்கு பரபரப்பாக பேச வைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது.
2023-ம் ஆண்டு மக்கள் அனைவரது மனதிலும் மறக்க முடியாத சம்பவங்கள் பல அரங்கேறியுள்ளன. இதில் சில விபத்துக்களும் அடங்கும். ஒரு விபத்து ஏற்பட்டால், அதன் பரபரப்பு ஓரிரு நாளில் முடிந்துவிடும். ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் 17 நாட்களுக்கு பரபரப்பாக பேச வைத்த விபத்தாக உத்தரகாண்ட் சுரங்க விபத்து மாறிவிட்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை பற்றியும், சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வாறு மீட்கப்பட்டனர் என்பது பற்றியும் பின்வருமாறு பார்க்கலாம்.
புண்ணியத்தலங்கள் நிறைந்த இமயமலை பகுதியை கொண்ட மாநிலம் உத்தரகாண்ட். மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுமார் 4½ கி.மீ. தூரத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை பணி நிறைவடைந்தால் 28 கிலோ மீட்டர் பயண தூரம் 4½ கி.மீ. தூரமாக குறையும். இதற்கான பணிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இவ்வாறு சுரங்கப்பாதை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கடந்த நவம்பர் 12-ந் தேதி தீபாவளியன்று அதிகாலை 5 மணி அளவில், சுரங்கத்தின் வெளிப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டது. அப்போது அங்கு பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.
தொழிலாளர்கள் சிக்கியிருப்பது தொடர்பாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. ஆக்சிஜன் சப்ளை வழங்கும் குழாய் வழியாக தொழிலாளர்களுடன் தொடர்பு உருவாக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்தது.
சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக 'ஆகர்' எந்திரம் கொண்டுவரப்பட்டது. இந்த எந்திரத்தின் மூலம் துளையிட்டு, அதற்குள் இரும்பு குழாய்களை பொருத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது.
இதற்காக துளையிடும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. நவம்பர் 17-ந் தேதி 24 மீட்டர் தூரத்துக்கு துளையிடப்பட்டு, அந்த துளைகள் வழியாக 4 குழாய்கள் நுழைக்கப்பட்டன. பின்னர் 5-வது குழாயை நுழைத்தபோது பாறையால் இடையூறு ஏற்பட்டது. தொடர்ந்து துளையிட்டால் மேலும் சுரங்கம் இடிந்து விழும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்ததால், துளையிடும் பணி நடக்கவில்லை. இதையடுத்து நவம்பர் 18-ந் தேதி பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மாற்று வழிகள் குறித்து ஆலோசித்தனர். அதில், ஒரே நேரத்தில் 5 மீட்பு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மீட்பு பணி தொடர்ந்து தடங்கல்களையும், பிரச்சினைகளையும் சந்தித்தது. அதற்கு, துளையிடும் பிரமாண்ட எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளும், இடிபாடுகளுக்கு இடையே துளையிடும்போது இடையூறாக இருந்த உலோகத் துண்டுகள், பெரும் பாறைகள் போன்றவையும் காரணம்.
குழாய் வழியே அனுப்பப்பட்ட 'எண்டோஸ்கோபிக் கேமரா' மூலம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு நவம்பர் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. இதனால், 10 நாட்களுக்கு பிறகு அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு நிம்மதி பிறந்தது. தொழிலாளர்கள் பொழுதுபோக்க விளையாட்டு சாதனங்களும், வெளியே காத்திருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள தரைவழி தொலைபேசி வசதியும், செல்போன் வசதியும் ஏற்படுத்தப்பட்டன.
நவம்பர் 25-ந் தேதி துளையிடும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியபோது 'ஆகர்' எந்திரத்தின் பிளேடு, உடைந்து சிக்கிக்கொண்டது. இதனால் மீண்டும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று வழிகளை அதிகாரிகள் பரிசீலித்தனர்.
இதன் பின்னர் இரும்புக்குழாய்க்குள், தொழிலாளர்களை அனுப்பி துளையிடும் பணிகள் தொடங்கின. ரேட் ஹோல் மைனிங் எனப்படும் எலி வளை போன்று துளையிடும் பணிகளை இதற்குரிய நிபுணத்துவம் கொண்ட தொழிலாளர்களை வைத்து மேற்கொள்ளப்பட்டது.
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்படும் 35 பேர் கொண்ட மெட்ராஸ் சேப்பர்ஸ் பொறியாளர் குழு ஆலோசனை செய்தது. மேற்குவங்க மாநிலத்தை சோந்த 5 பேர் கொண்ட பொறியாளர் குழுவும் ஆலோசனை செய்தது. இதையடுத்து எலி வளை தோண்டும் பாணியில் தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் தோண்டும் பணிகளைச் செய்தனர். 'எலி வளை தொழிலாளர்கள்' எனப்படும், குறுகிய சுரங்கங்களை உருவாக்கும் அனுபவம் வாய்ந்த 12 பேர் இதில் இறக்கப்பட்டனர். இந்த முறையே வெற்றிக்கு வித்திட்டது.
அதையடுத்து சுரங்கப்பாதை பகுதியில் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாம்களில் டாக்டர்கள் தயாராக இருந்தனர். உத்தர்காசி மாவட்டத்தில் சிலியாலிசார் நகரில் 41 படுக்கை சிறப்பு வார்டும் தயார்ப்படுத்தப்பட்டது. ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர் ஆகியவையும் தயார் நிலையில் இருந்தன.
நவம்பர் 28-ந்தேதி இரவு 8 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியிருந்த பகுதிக்குள் குழாய் வழியாக சென்ற தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தொழிலாளர்களை அதன் வழியாகவே ஒருவர் பின் ஒருவராக மீட்டுவரத்தொடங்கினர். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள், குழாய்க்குள், சக்கரங்கள் பொருத்திய 'ஸ்டிரெச்சர்கள்' மூலம் மீட்டுவரப்பட்டனர்.
வெளியே வந்த தொழிலாளர்கள், 17 நாட்களுக்கு பின் முதல் முறையாக 'சுதந்திர காற்றை' சுவாசித்தனர். அவர்களை, சுரங்கப்பாதை பகுதியில் முகாமிட்டிருந்த முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் அன்போடு நலம் விசாரித்தனர்.
சுரங்கப்பாதைக்கு வெளியே அவர்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் ஆனந்தக்கண்ணீர் விட்டனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு மூலம் அறிந்த, பல்வேறு மாநிலங்களில் உள்ள அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.