மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
|மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள குமேட்பூர் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை 10.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ரெயில்வே பணியாளர்கள், விரைந்து வந்து ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கதிஹார் கோட்ட ரெயில்வே மேலாளர் சுரேந்திர குமார் கூறியதாவது, பெட்ரோல் ஏற்றப்பட்ட சரக்கு ரெயில் மேற்கு வங்காள மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பீகாரில் உள்ள கதிஹாருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலின் 5 பெட்டிகள் குமேட்பூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இதனால் நியூ ஜல்பைகுரி மற்றும் கதிஹார் இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் பற்றி உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.