காஷ்மீர்: பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் - 5 பேர் காயம்
|காஷ்மீரில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் உள்ள சந்தை இன்று மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.