சத்தீஷ்கார்: சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலி
|சத்தீஷ்காரில் நடந்த சாலை விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பானுபிரதாப்பூரில் இருந்து அந்தகர் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் காங்கர் மாவட்டத்தின் அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த இரண்டு பைக் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொகுசு காரின் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சொகுசு காரின் டிரைவர் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காம்தி கவாடே, பிரியங்கா நிஷாத், செவன் குமார் மற்றும் சோகேஷ்வர் பிரஜாபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்றார்.