'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா: நாடாளுமன்ற குழு முதல் கூட்டம் - ஜன. 8-ல் நடக்கிறது
|'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மேலும், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேவும் அதற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் வெடித்தன.
அதனால், இந்த திட்டம் குறித்து முடிவெடுக்க கூட்டு நாடாளுமன்றக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்தக் குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் இடம்பெற உள்ளனர்.
இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜன.8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது குறிப்பிட்ட விஷயங்களில் அல்லது மசோதாவில் எதாவது எதிர்ப்போ, சந்தேகமோ எழுந்தால்தான் அமைக்கப்படும். இந்த குழுவில் இரண்டு அவை உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள். இந்தக் குழு அரசின் எந்தத் தூண்டுதல்களும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அறிக்கையைத் தயார் செய்யும்.
இந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பித்த பின்னர், இந்த குழு கலைக்கப்படும். ஆனால், இந்தக் குழு தரும் அறிக்கை தான் இறுதியானது என்பதில்லை. அரசு வேண்டுமென்றால் கூடுதல் விசாரணைக்குக் கூட செல்லலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல்
இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது புதிய யோசனை அல்ல. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான முதல் பொதுத் தேர்தல் 1951-52 ம் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது. இந்த நடைமுறை 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்தது என தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
மத்திய அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கடுமையாக தொடக்க நிலையிலேயே எதிர்த்தன. இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன. இந்த மசோதா நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்புக்கு எதிரானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது; எதிர்காலத்தில் மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இல்லாத நிலைமையை உருவாக்கும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக எச்சரித்தனர். மேலும் திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில், 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் இப்படியான ஒரு மசோதாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப பிரதமர் மோடி விரும்புகிறார் என்றார். இதனையடுத்து கூட்டுக் குழுவுக்கு அனுப்புவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் 269 எம்பிக்கள், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.