பெண் டாக்டர் பலாத்கார விவகாரம்; எதிர்ப்பு பேரணி நடத்திய அரசு பள்ளிகளுக்கு பறந்த நோட்டீஸ்
|மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார விவகாரத்தில் எதிர்ப்பு பேரணி நடத்திய அரசு பள்ளிகள் விளக்கம் அளிக்க தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஹவுரா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி சமீப நாட்களாக, நாடு முழுவதும் டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹவுரா நகரில் செயல்பட்டு வரும் 3 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் பேரணி ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் பற்றி அரசு நிர்வாகத்திற்கு தெரிய வந்ததும், 24 மணிநேரத்தில் இதற்கான உரிய பதிலை அளிக்க வேண்டும் என கூறி பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
அப்படி அவர்கள் விளக்கம் அளிக்க தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையருகே பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவானது, வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கொல்கத்தா போலீசார் அறிவித்து உள்ளனர்.