'விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது' - காங்கிரஸ் எச்சரிக்கை
|நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி,
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 101 விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்படி ஷம்பு எல்லையில் இருந்து அவர்கள் தங்கள் பேரணியை தொடங்கினர்.
இந்நிலையில், அரியானா எல்லையில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகளின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என காங்கிரஸ் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"அரியானாவில் விவசாயிகளை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு சீன எல்லையில் போடப்பட்டிருந்தால் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்திருக்காது. மோடி அரசுக்கு திரைப்படம் பார்க்க நேரமிருக்கிறது, ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க நேரமில்லை.
பிரதமர் மோடி உடனடியாக விவசாயிகளிடம் பேசி, உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை இயற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு துணை நிற்கிறது. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்படுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.