விவசாயிகள் பேரணி: அரியானாவின் 11 கிராமத்தில் இணைய சேவை நிறுத்தம்
|விவசாயிகள் பேரணி எதிரொலியாக அரியானா மாநிலம் அம்பாலாவின் 11 கிராமத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சண்டிகார்,
வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் குழு டெல்லியை நோக்கி பேரணி நடத்த உள்ளனர். இவர்கள் டிராக்டர்களில் பஞ்சாப் - ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையில் நேற்று முன்தினம் குவிந்தனர். ஷம்பு எல்லையில் இருந்து இவர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடைபயணமாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் அரியானா எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் செல்போன் இணையசேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றை வரும் 9ம் தேதி இரவு 11.59 மணி வரை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. விவசாயிகள் பேரணியால் பதற்றம், கிளர்ச்சி மற்றும் பொது அமைதிக்கு இடையூறு என்ற அச்சம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.