அமைதியை சீர்குலைக்கும் வகையில் மணிப்பூர் முதல்-மந்திரியின் போலி ஆடியோ வெளியீடு
|மணிப்பூர் முதல்-மந்திரியின் போலி ஆடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குகி ஸோ மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வன்முறை மூண்டது. இனக்கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவிய அந்த வன்முறையால் 200 அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் புதியதாக ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், வீடு ஒன்று தீக்கிரையானது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் அம்மாநில முதல்-மந்திரி பிரேன் சிங்கின் குரல் என்று பொய்யாக கூறி ஆடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பி வரும் நிலையில் இதுபோன்ற பொய்யான ஆடியோ மீண்டும் கலவரத்திற்கு வழிவகுக்கும் முயற்சியாகும்.
இதுகுறித்து மணிப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தருணத்தில் அமைதியை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.