மராட்டிய சட்டசபை தேர்தல்: பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது
|பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் பழுது காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
அகோலா மேற்கு சட்டசபை தொகுதியில் உள்ள பி.ஆர். உயர்நிலை பள்ளியில் உள்ள எந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலேகான் அவுட்டர் சட்டசபை தொகுதியின் பூத் எண் 292ல் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென செயல்படாமல் நின்றதால் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். ஜல்கான் மாவட்டத்தின் ஜாம்னரில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளி வாக்குச்சாவடியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தொடங்காததால் பலர் குழப்பமடைந்தனர். இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாக்குப்பதிவு தாமதமானது.
அதேபோல, புல்தானா-ஜல்கான் ஜமோத் தொகுதியில் உள்ள மனஸ்கான் என்ற இடத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சிறிது நேரம் தடைபட்டது. இதனை தொடர்ந்து, சத்ரபதி சம்பாஜிநகர் பைதான் தாலுகாவில் உள்ள தாதேகான் புத்ருக்கிலும், கோலாப்பூர் வடக்கு தொகுதியிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் மக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.