'காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறையால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது' - யோகி ஆதித்யநாத்
|காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறை வந்தால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா( ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகளின் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகின்றன. பெண்களுக்கு மாதம் ரூ.3,000, அரசு பஸ்சில் இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை காங்கிரசின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் தானேவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தார். காங்கிரஸ் கட்சி அதனை திரும்ப கொண்டு வருவது குறித்து பேசி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 4-வது தலைமுறை வந்தால் கூட காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க முடியாது.
நாட்டில் ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தில் கூட மகாவிகாஸ் அகாடி மக்களுக்கு கூட்டணி எதுவும் செய்ய்யவில்லை. நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியால் 65 ஆண்டுகளில் செய்ய முடியாததை பா.ஜ.க. இரண்டே ஆண்டுகளில் செய்து முடித்தது."
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.