ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
|ஆபாச பட வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
மும்பை,
ஆபாசப் படங்களை தயாரித்து விநியோகித்த புகாரில் ராஜ் குந்த்ரா, கடந்த 2021-ஆம் ஆண்டில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் ராஜ் குந்த்ரா விடுவிக்கப்பட்டார். தனக்கு எதிரான குற்றசாட்டுக்களை ராஜ்குந்த்ரா மறுத்து வருகிறார். அதேவேளையில், 98 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாகவும், பிட்காயின் மோசடிகள் நடந்ததாகவும் அமலாக்கத்துறை தரப்பில் ராஜ்குந்த்ரா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த 29-ந் தேதி அமலாக்கத்துறை மும்பையில் உள்ள ராஜ்குந்த்ராவுக்கு சொந்தமான இடங்கள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழில் அதிபர் சம்மந்தப்பட்ட இடங்கள் என 15 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ராஜ்குந்த்ரா மற்றும் உத்தரபிரதேச தொழில் அதிபருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில், இன்று அல்லது இந்த வாரத்தில் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.