வணிகம்
தேர்தல் முடிவு எதிரொலி; ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்
வணிகம்

தேர்தல் முடிவு எதிரொலி; ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்

தினத்தந்தி
|
9 Oct 2024 10:12 AM IST

நாட்டில் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வெளியான நிலையில், முதலீட்டாளர்களிடையேயான நம்பிக்கையில் ஊக்கம் பெற்று அதன் தாக்கம் பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 319.77 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயர்ந்து 81,954.58 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 52.65 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 25,065.80 புள்ளிகளாக காணப்பட்டது.

நிப்டியில், பொது துறை வங்கியின் குறியீடு உச்சபட்ச லாபத்துடன் இன்று தொடங்கியது. பிற துறைகளும் கூட லாபத்துடனேயே தொடங்கின. இவற்றில் மொத்தம் பட்டியலிடப்பட்ட 50 நிறுவனங்களில் 38 நிறுவன பங்குகள் லாபத்துடனும், 11 பங்குகள் சரிவுடனும், ஒரு நிறுவனத்தின் பங்குகள் மாற்றம் எதுவுமின்றியும் தொடங்கின.

அரியானா மற்றும் காஷ்மீரில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வெளியான நிலையில், அதன் தாக்கம் பங்கு சந்தைகளில் எதிரொலித்து உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பெற்று உள்ளது என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்பட உள்ளது. முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்பட்டாலும், வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என முதலீட்டாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இரண்டாம் காலாண்டு முடிவுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த கூடும். இதில், வருவாய் சற்றே அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என தனியார் நிதி சேவைக்கான தலைமை ஆய்வாளர் வினோத் கூறுகிறார்.

மேலும் செய்திகள்