< Back
தேசிய செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
தேசிய செய்திகள்

உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
15 Nov 2024 4:54 PM IST

பிரசாரத்திற்கு சென்ற அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு கடும் போட்டி நிலவி வருவதால், பல்வேறு கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம், ஹிங்கோலி தொகுதியில் இன்று பிரசாரத்திற்கு சென்ற போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பான வீடியோவை, மத்திய மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "இன்று, மராட்டிய மாநிலத்தின் ஹிங்கோலி சட்டசபை தொகுதியில் எனது தேர்தல் பிரசாரத்தின் போது, எனது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நேர்மையான தேர்தல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல் முறையை பா.ஜ.க. நம்புகிறது. தேர்தல் ஆணையம், அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறது. ஆரோக்கியமான தேர்தல் முறைக்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். இந்தியாவை உலகின் வலிமையான ஜனநாயகமாக வைத்திருப்பதில் நமது கடமைகளைச் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்