ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா
|புதிதாக அமைய இருக்கும் அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க வாய்ப்பு இல்லை என சிவசேனா கட்சி கூறியுள்ளது.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக அதிக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள நிலையில், முதல் மந்திரி பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ்க்கே கொடுக்க வேண்டும் என்பதில் அக்கட்சி தலைமை உறுதியாக உள்ளது. இதனால், இறங்கி வந்த ஏக்நாத் ஷிண்டே பிரதமர் மோடி, அமித்ஷா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார்.
இதையடுத்து புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிர்சாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அமையப்போகும் புதிய அரசின் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே முதல்-மந்திரியாக பதவி வகித்த அவருக்கு இது பொருந்தாது. சிவசனோ தனது மற்றொரு தலைவரை துணை முதல்-மந்திரி பதவிக்கு பரிந்துரைக்கும். எனினும் ஏக்நாத் ஷிண்டே மந்திரி சபையில் அங்கம் வகிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.