< Back
தேசிய செய்திகள்
ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தேசிய செய்திகள்

ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
3 Dec 2024 3:54 PM IST

மராட்டிய காபந்து முதல் மந்திரியும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 23-ந் தேதி அறிவிக்கப்பட்டது. முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையிலும் புதிய அரசு அமைக்கப்படாமல் உள்ளது. புதிய அரசின் பதவி ஏற்பு விழா வருகிற 5-ந் தேதி நடக்கும் என பா.ஜனதா அறிவித்துள்ளது. இதில் பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

துணை முதல் மந்திரிகளாக ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மந்திரி பதவி கேட்டு அடம் பிடித்த ஏக்நாத் ஷிண்டே, அது கிடைக்காவிட்டால் முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று கேட்டதாக சொல்லப்பட்டது. இதனால், புதிய அரசு அமைவதில் இழுபரி ஏற்பட்ட நிலையில் , ஏக்நாத் ஷிண்டே துணை முதல் மந்திரி பதவியேற்க சம்மதம் தெரிவித்ததாக மராட்டிய அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பா.ஜனதா அறிவித்து இருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி, காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சியினர் கூறினர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, பிரச்சினை எதுவும் இல்லை என சொல்லிவிட்டு சென்றார்.

மேலும் செய்திகள்