
கனிம வளங்கள் மீது வசூலிக்கப்பட்ட ராயல்டி; திருப்பி அளிப்பதில் தீர்வு காண முயற்சி - மத்திய அரசு தகவல்

கனிம வளங்கள் மீது மத்திய அரசு வசூலித்த ராயல்டி, வரியை திருப்பி அளிப்பதற்கு தீர்வு காண முயற்சி நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஜார்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இருப்பினும், அந்த கனிம வளங்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு ராயல்டி மற்றும் வரி வசூலித்து வந்தது. கடந்த 1989-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசுக்குத்தான் அதற்கு அதிகாரம் இருப்பதாக கூறியது.
அந்த தீர்ப்பை எதிர்த்து கனிம வளம் மிகுந்த ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தது.
கனிமவளங்கள் மற்றும் கனிம வளம் மிகுந்த நிலங்கள் மீது ராயல்டி மற்றும் வரி வசூலிக்க மாநிலங்களுக்குத்தான் அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு அளித்தது.
அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 12 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வசூலித்த கனிம வளங்கள் மீதான ராயல்டி மற்றும் வரியை மாநில அரசுகள் திரும்பப் பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியது.
அதையடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கனிமவளங்கள் மீது விதிக்கப்பட்ட ராயல்டி மற்றும் வரியை திருப்பித் தரும் பிரச்சினையில் மாநிலங்களுடன் தீர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருவதாக தெரிவித்தார்.
எனவே, விசாரணையை மே மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், ஜார்கண்ட் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி, ''எப்போது வேண்டுமானாலும் தீர்வு ஏற்படுத்தலாம். விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது'' என்று கூறினார். அதைத் தொடர்ந்து, விசாரணையை ஏப்ரல் 24-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.