மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி: பிரதமர் மோடி
|மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள நமது மாற்றுத்திறனாளிகள் தேசத்தின் கவுரவம், சுயமரியாதை ஆகியவற்றின் சக்தியாக மாறி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். அவர்களுக்காக பல கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன; பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நான் பொது வாழ்விற்கு வந்ததிலிருந்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை எளிதாக்க ஒவ்வொரு வாய்ப்பிலும் முயற்சி செய்துள்ளேன். பிரதமரான பின், இந்த சேவையை தேசத்தின் தீர்மானமாக மாற்றினேன். எந்தவொரு நபரும் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ளாமல் அவரது திறமைக்கு ஏற்ப முழு மரியாதையுடன் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பைப் பெறுகின்ற அனைவரையும் உள்ளடக்கிய சூழலை அரசு விரும்புகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று நாடுமுழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். இந்த முடிவுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றங்களையும் உருவாக்கின. நமது மாற்றுத்திறனாளிகள் இன்று இந்தியாவை உருவாக்குவதில் அர்ப்பணிப்பு மிக்க பங்குதாரராக இருந்து நம்மை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் மாற்றுத்திறனாளி நண்பர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்திருக்கிறேன். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு அளித்திருக்கும் மரியாதை இந்த ஆற்றலின் அடையாளமாகும். இதன் மூலம் அவர்களின் சக்தி தேசத்தின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சி வெறும் அரசுத் திட்டமல்ல. இந்தப் பயிற்சிகள் மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளன. அவர்களுக்கு வேலை தேடுவதற்கான சுய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்க்கை எளிமையாகவும், சுயமரியாதையுடனும் இருக்க வேண்டும் என்பதே அரசின் அடிப்படைக் கொள்கையாகும். மாற்றுத்திறனாளி நண்பர்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முழுமையாகப் பாடுபட்டு வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நமது சமூகத்தின் உறுதிப்பாட்டை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைக் கண்டு நான் பெருமை அடைகிறேன்.
2047-ம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நமது மாற்றுத்திறனாளி நண்பர்கள் உலகம் முழுவதற்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பார்கள் என்பதை நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இந்த இலக்கை அடைய இன்று நாம் உறுதியேற்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பெரிய பங்களிப்பை நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன். இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.