ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் கைது
|தன்னை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர் என அமானத்துல்லா கான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி ஓக்லா சட்டசபை தொகுதியின் உறுப்பினரான அமானத்துல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி ஓக்லா பகுதியில் அமைந்துள்ள அமானத்துல்லா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவரது வீட்டின் அருகே போலீசார் அதிகளவில் குவிந்துள்ளனர். தன்னை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர் என அமனதுல்லா கான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் "சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது கைப்பாவையாக உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை எனது வீட்டுக்கு வந்தனர். என்னையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களையும் துன்புறுத்துவது சர்வாதிகாரியின் நோக்கம். மக்களுக்கு நேர்மையாக இருப்பது குற்றமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த சர்வாதிகாரியின் ஆட்சி நீடிக்கும்?" என எக்ஸ் தளத்தில் அமானத்துல்லா கான் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவை அடுத்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் அமலாக்கத்துறையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் அமானத்துல்லா கான் கோரிய முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமானத்துல்லா கானின் வீட்டில் 6 மணி நேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.