2025-ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்: இந்தியாவில் தென்படுமா?
|அடுத்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நிகழ உள்ளன.
இந்தூர்,
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. குறிப்பாக பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் 2025-ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் வர உள்ளன. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திரபிரகாஷ் குப்தா கூறியதாவது;
2025 ம் ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளன. மார்ச் 14-ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படும். இந்த வானியல் நிகழ்வு நாட்டில் பகல் நேரத்தில் நிகழும் என்பதால் இது இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. மாறாக இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா, வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தெரியும்.
மார்ச் 29 அன்று ஒரு சூரிய கிரகணம் ஏற்படும். இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். இந்த நிகழ்வையும் இந்தியாவில் காண முடியாது. இந்த கிரகணம் வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், ஐரோப்பா மற்றும் வடமேற்கு ரஷியாவில் தெரியும்.
செப்டம்பர் 7 மற்றும் 8 க்கு இடையில் ஒரு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது முழு சந்திர கிரகணம் ஆகும். இது இந்தியாவில் தெரியும். அதுமட்டுமின்றி, ஆசியாவின் பிற நாடுகளிலும், ஐரோப்பா, அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் தெரியும் .
2025 ம் ஆண்டின் கடைசி கிரகணமாக செப்டம்பர் 21 மற்றும் 22 க்கு இடையில் ஒரு சூரிய கிரகணம் நிகழும். இது பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். மேலும் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது." என்றார்.