< Back
தேசிய செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு
தேசிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களை என்னால் ஹேக் செய்ய முடியும்.. பரபரப்பு வீடியோ: சையத் சுஜா மீது மீண்டும் வழக்கு

தினத்தந்தி
|
1 Dec 2024 4:22 PM IST

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தன்னால் ஹேக் செய்ய முடியும் என சுஜா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

மும்பை:

இந்தியாவில் தேர்தல் நடைமுறையானது வாக்குச்சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு மாறியபின் தொடர்ந்து சந்தேகங்களும், சர்ச்சைகளும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும், ஒரு கட்சிக்கு ஆதரவாக மாற்றியமைக்க முடியும், ஹேக் செய்ய முடியும் என்றெல்லாம் பலவாறாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டு கூறிய யாராலும் அதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, இது தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனினும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்புகின்றன.

இந்நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை (EVM) தன்னால் ஹேக் செய்து, எந்திரத்தின் அதிர்வெண்ணை தனிமைப்படுத்தி குளறுபடி செய்ய முடியும் என்று ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. வீடியோ கால் மூலம் அது பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த வீடியோ தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் சென்றது. வீடியோவை ஆய்வு செய்தபோது, அந்த வீடியோவில் பேசியது அமெரிக்க வாழ் இந்தியரான சையத் சுஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மும்பை சைபர் கிரைம் போலீசில், மராட்டிய தலைமை தேர்தல் அதிகாரி புகார் அளித்தார்.

அதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என சையத் சுஜா கூறியிருப்பது தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டிலும் இதேபோன்ற குற்றச்சாட்டை சுஜா கூறியிருந்தார். தவறான தகவல்களை வெளியிட்டதற்காக அவர் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை சுட்டிக்காட்டி மராட்டிய தேர்தல் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருவதாகவும், தவறான தகவலை பரப்பும் நபருடன் இந்தியாவில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் அல்லது தீங்கிழைக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்