< Back
தேசிய செய்திகள்
செல்போன் எண்ணை பிளாக் செய்த பெண் - ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த விபரீத செயல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

செல்போன் எண்ணை 'பிளாக்' செய்த பெண் - ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த விபரீத செயல்

தினத்தந்தி
|
29 May 2024 3:08 AM IST

லட்சுமி என்பவருக்கும், மவுனேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பாகல்கோட்டை,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலடகி போலீஸ் எல்லைக்குட்பட்ட கடனகேரி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் மவுனேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. மவுனேசுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார்.

இதையடுத்து மவுனேசும், லட்சுமியும் கடந்த 1½ மாதங்களாக கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் லட்சுமியின் நடத்தையில் மவுனேசுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மவுனேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதையடுத்து மவுனேசின் செல்போன் எண்ணை லட்சுமி 'பிளாக்'செய்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமியின் வீட்டுக்கு மவுனேஷ் வந்துள்ளார். ஆனால் லட்சுமி கதவை திறக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மவுனேஷ், வீட்டின் ஜன்னலை திறந்து தான் வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) ஜன்னல் வழியாக லட்சுமி மீது வீசினார். இதையடுத்து அங்கிருந்து மவுனேஷ் தப்பி ஓடிவிட்டார்.

திராவகம் பட்டதில் லட்சுமியின் இடது கண் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது 8 வயது மகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கலடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலன் மவுனேசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்