< Back
தேசிய செய்திகள்
புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்

தினத்தந்தி
|
3 Dec 2024 8:41 AM IST

இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இந்த சூழலில் இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 'பெஞ்சல்' புயலால் புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன. இந்த சூழலில் இந்த மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, சேத மதிப்பீட்டை கணக்கிட மத்தியக்குழுவை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளநிலையில், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நேற்று நாடாளுமன்றத்தில் இதனை வலியுறுத்தினார். இது தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவை சபாநாயகருக்கு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார். இதைப்போல ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி நோட்டீஸ் அளித்தார். இவை தொடர்பாக அவையில் நடந்த அமளியால் அவை முடங்கியது. இதனைத்தொடர்ந்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பெஞ்சல் புயல் நிவாரணம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க. எம்.பி., கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்தும், மத்திய குழுவை அனுப்புவது குறித்தும் விவாதிக்க அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்