டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
|டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, நேற்று முன் தினம் சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
இந்தத் தனி தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதல்-அமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர முடியாது. அதை அனுமதிக்கவும் மாட்டோம். எதிர்க்கட்சிகள் பார்வையில் அலட்சியமாகவும், நாங்கள் தவறிவிட்டோம் என்றுகூட இருக்கலாம். ஆனால், எங்களுடைய பார்வையில் இந்த பிரச்சினையை சுட்டிக்காட்டி கடிதங்கள் எழுதியிருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதனை தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதல்-அமைச்சர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீசை வழங்கி இருந்தனர்.
இதனிடையே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கியது முதல், தொழிலதிபர் கவுதம் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் போராட்டம், உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும்
ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2வது நாளாக இன்றும் நோட்டீஸ் வழங்கி உள்ளார். அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென அதில் கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூரும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று சுரங்க ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.