புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
|மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
புதுச்சேரி,
யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் புதுச்சேரி அரசு இருந்து வருகிறது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் சம்பள முறை பின்பற்றப்படுவதுடன் ஆண்டுதோறும் தீபாவளி போனசும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி புதுவை அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலாளர் சிவக்குமார் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகல் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் போனஸ் குறித்த இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.