< Back
தேசிய செய்திகள்
இந்தியா-சீனா ஒப்பந்தம் எதிரொலி:  4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லை பகுதியில் நடந்த மாற்றம்
தேசிய செய்திகள்

இந்தியா-சீனா ஒப்பந்தம் எதிரொலி: 4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லை பகுதியில் நடந்த மாற்றம்

தினத்தந்தி
|
25 Oct 2024 11:24 AM IST

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும் சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

லடாக்,

கிழக்கு லடாக், அருணாசலப் பிரதேச எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. கிழக்கு லடாக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் வீரர்களை குவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பல கட்டப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுபாட்டுக் கோட்டில் ரோந்து செல்வது தொடர்பாக சீனாவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியா அறிவித்தது.

இதனையடுத்து தற்போது கிழக்கு லடாக்கின் டெப்சாங் பகுதியில் உள்ள 'ஒய்' சந்திப்பு மற்றும் டெம்சோக்கில் உள்ள சார்டிங் நுல்லா சந்திப்பு பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின்வாங்கியுள்ளனர். மேலும், அந்த பகுதிகளில் இரு நாட்டு வீரர்கள் அமைத்திருந்த தற்காலிக கட்டுமானங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து ராணுவ வீரர்கள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிய நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பின் வாங்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்