'டிஜிட்டல் கைது' மோசடி; ஆடையை களைந்து சோதனை - இளம்பெண்ணிடம் ரூ.1.7 லட்சத்தை பறித்த கும்பல்
|'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலிடம் இளம்பெண் ஒருவர் ரூ.1.7 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
மும்பை,
இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனை நம்பி பயந்து போனவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழக்கின்றனர்.
இந்த நிலையில், இளம்பெண் ஒருவரை டிஜிட்டல் கைது மோசடி கும்பல் ஏமாற்றி ரூ.1.6 லட்சம் பணத்தை பறித்தது மட்டுமின்றி, முழு உடல் சோதனை என்ற பெயரில் அந்த பெண்ணின் ஆடைகளை களைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது மொபைல் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி என்றும், தற்போது சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், இந்த இளம்பெண்ணுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் கைது செய்யப்போவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண், தனக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இளம்பெண்ணை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது அவர்கள் அந்த பெண்ணை 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாகவும், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் நேராக ஒரு ஓட்டலுக்குச் சென்று அறை எடுத்து தங்குமாறும் கூறியுள்ளனர். இதன்படி அந்த பெண் ஒரு ஓட்டலுக்கு சென்று தங்கிய நிலையில், மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் வீடியோ கால் மூலம் 'விசாரணையை' தொடங்கியுள்ளனர்.
அவர்கள் அந்த பெண்ணை மிரட்டி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1,78,000 பணத்தை பரிமாற்றம் செய்ய வைத்துள்ளனர். அது மட்டுமின்றி, முழு உடல் சோதனை என்ற பெயரில் அந்த பெண்ணின் ஆடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சினையில் எப்படியாவது இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூறிய அனைத்தையும் அந்த பெண் செய்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இது குறித்து விசாரித்து பார்த்தபோதுதான், இது ஒரு ஏமாற்று வேலை என்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.