< Back
தேசிய செய்திகள்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
1 Jan 2025 8:58 PM IST

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே பெருவழிப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு வரிசை அமைக்க சபரிமலை தேவசம் போர்டு முடிவு செய்தது. இதற்காக அவர்கள் பாதயாத்திரை தொடங்கும் பகுதியிலேயே வனத்துறை சார்பில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் மகர விளக்கு பூஜை தொடங்கியது.

இதற்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தார். இதை அடுத்து முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இன்று புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்காக ஜனவரி 15-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. மேலும் ஜனவரி 12 முதல் 14-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் வசதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பெருவழிப்பாதை வரும் பக்தர்களுக்கான சிறப்பு தரிசனம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எரிமேலி மற்றும் புல்மேடு வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்கத்தைவிட ஐந்து மடங்கு பக்தர்கள் அந்த பாதையில் பயணம் செய்கின்றனர். இதனால் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக எரிமேலி, புல்மேடு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்