< Back
தேசிய செய்திகள்
3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்
தேசிய செய்திகள்

3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

தினத்தந்தி
|
5 Dec 2024 5:53 PM IST

மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

மும்பை,

மராட்டிய மாநில தேர்தல் முடிவில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 132 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களிலும், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

மகாயுதி கூட்டணியின் சாதனையை தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா முதல்-மந்திரி பதவியை ஏற்க தயாரானது. ஆனால் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே விரும்பியதால் உடனடியாக ஆட்சியமைக்க முடியவில்லை. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவை சமரசப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா வெற்றி கண்டது.

இதன்படி நேற்று காலை மாநில பா.ஜனதா உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிசை கட்சியின் மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முன்மொழிந்தார். இதனை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக ஏற்றனர். இதைத்தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் ரூபானி வெளியிட்டார். இதன் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேர்வு ஆனார்.

பின்னர் அவர் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாருடன் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார். அதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று மாலை நடந்த புதிய அரசு பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவரான அஜித்பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அம்மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ், ஏற்கனவே 2014 முதல் 2019 வரை 5 ஆண்டு காலம் முழுமையாக முதல்-மந்திரி பதவியை வகித்தவர் ஆவார். 2019 தேர்தலில் பெரும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் 2-வது தடவையாக முதல்-மந்திரி பதவி ஏற்று வெறும் 3 நாட்கள் மட்டும் அந்த பதவியில் நீடித்தார். இந்நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தற்போது 3-வது முறையாக முதல்-மந்திரி பதவியை அலங்கரித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா, நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள், பா.ஜனதா முக்கிய நிர்வாகிகள், நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்