ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள் - தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு மோடி அறிவுரை
|நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
18வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. நீட்தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும். தேநீர் விற்றவர் எப்படி 3-வது முறையாக பிரதமராகலாம் என காங்கிரஸ் கருதுகிறது. பா.ஜனதா கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிக்கிறது.
மக்களவையில் ராகுல்காந்தி போல் செயல்படாதீர்கள். தகவல்களை சரிபார்த்து பேசவும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நிறைவடைந்தது.