< Back
தேசிய செய்திகள்
அமெரிக்க மாடல் என கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞர் கைது
தேசிய செய்திகள்

அமெரிக்க மாடல் என கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞர் கைது

தினத்தந்தி
|
4 Jan 2025 4:56 PM IST

அமெரிக்க மாடல் என கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் சிங் பிஷ்ட், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் இளம்பெண்களை குறிவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன்படி ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கிய துஷார் சிங், 18 முதல் 30 வயது வரையிலான பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அவர்களிடம் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என்றும், திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் துஷார் சிங் கூறியுள்ளார்.

இதனை நம்பி பல இளம்பெண்கள் இவரது வலையில் விழுந்துள்ளனர். அந்த பெண்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர், அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துஷார் சிங் கேட்டுள்ளார். அந்த பெண்களும் அவற்றை இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பெற்ற பின்னர் துஷார் சிங் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார்.

சம்பந்தப்பட்ட பெண்களிடம் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் துஷார் சிங் இறங்கியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து ஏராளமான பெண்கள் பணத்தை வழங்கியுள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான பெண்களை துஷார் சிங் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், துஷார் சிங்கால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், துஷார் சிங்கின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், துஷார் சிங் இதுவரை சுமார் 700 பெண்களிடம் தன்னை அமெரிக்க மாடல் என்று கூறி ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் மோசடிக்காக பயன்படுத்திய மொபைல் போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். துஷார் சிங்கிடம் இதுவரை எத்தனை பெண்கள் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்