டெல்லியில் தொடர்ந்து மோசமடைந்து வரும் காற்றின் தரம்
|ஆனந்த் விஹார், முண்ட்கா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 272 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியில் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது.
மொத்தம் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில், 37ல் இருந்து தரவுகள் துறையால் பகிரப்பட்டுள்ளது. அவற்றில், ஆனந்த் விஹார், அலிபூர், ஆயா நகர், பவானா, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, நரேலா, வசீர்பூர், விவேக் விஹார் மற்றும் சோனியா விஹார் ஆகிய 10 நிலையங்கள் "மிகவும் மோசமான" பிரிவில் இருந்தன, மிதமுள்ளவை மோசமான பிரிவில் பதிவாகின.
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட நான்கு அடி அதிகமாகும் அதே வேளையில் ஈரப்பதம் 85 சதவீதமாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.