டெல்லி: காயத்திற்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள்; டாக்டரை சுட்டு கொன்ற அவலம்
|டெல்லியில் மருத்துவமனைக்கு காயங்களுடன் சென்ற 2 பேருக்கு, செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.
புதுடெல்லி,
டெல்லியின் ஜெயித்பூர் பகுதியில் காலிண்டி கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நிமா என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 2 பேர் நோயாளிகள் என கூறிக்கொண்டு இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளனர்.
அவர்கள் காயங்களுடன் சென்றுள்ளனர். இதனால், மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதன் பின் அவர்கள் இருவரும் டாக்டர் எங்கே? அவரை சந்திக்க வேண்டும் என கூறினர்.
இதன்பின்னர் அவர்கள் இருவரும் டாக்டர் இருக்கும் அறைக்கு சென்றதும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டாக்டரை சுட்டு கொன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
யுனானி முறையிலான சிகிச்சை அளித்து வந்த அந்த டாக்டரின் பெயர் ஜாவித் அக்தர் என தெரிய வந்துள்ளது. டாக்டரை சுட்டு கொன்ற அவர்கள் இருவரும் மைனர் சிறுவர்கள் என போலீசார் தெரிவித்தனர். நோயாளிகள் என்ற பெயரில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் டாக்டரை சுட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் பணியிடத்தில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். எனினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் டாக்டர்கள் மீது நோயாளிகள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
கூடுதல் செய்தி: செருப்பை கழற்ற கூறிய டாக்டருக்கு அடி, உதை; வைரலான வீடியோ