< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி மந்திரி அதிஷி உண்ணாவிரத போராட்டம்

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

அரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்லி மந்திரி அதிஷி உண்ணாவிரத போராட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2024 12:46 PM IST

அரியானாவிடம் இருந்து டெல்லிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என அதிஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதே சமயம், ஆம் ஆத்மி அரசு சட்டவிரோத டேங்கர் தண்ணீர் விநியோகத்தையும், ஊழலையும் ஆதரிக்க டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது என பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே 21-ந்தேதிக்குள் அரியானாவில் இருந்து டெல்லிக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சத்யாகிரக போராட்டத்தை மேற்கொள்வேன் என டெல்லி நீர்வளத்துறை மந்திரி அதிஷி கடந்த புதன்கிழமை அறிவித்தார். இந்நிலையில் இன்று அதிஷி தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்று வரை சுமார் 28 லட்சம் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

அநீதிக்கு எதிராக போராட சத்யாகிரக பாதையை பின்பற்ற வேண்டும் என மகாத்மா காந்தி கற்றுக்கொடுத்திருக்கிறார். அதன்படி இன்றைய தினம் தண்ணீர் சத்யாகிரகத்தை நான் தொடங்குகிறேன். இன்று ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்திவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்குவேன். டெல்லி மக்களுக்கு அரியானாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்