டெல்லி மேயர் தேர்தல்: வாக்குப்பதிவு மும்முரம்
|7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்றது. பா.ஜ.க.வுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றின.
எனினும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதில், ஒரு கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் மோதி கொண்டன. இதற்காக ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார். இதன்பின்னர், 4-வது முறையாக ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஓபராய், பா.ஜ.க. வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார். கடைசி நேரத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர். இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார்.
இந்த சூழலில், நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடக்கவிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் 7 மாதங்களுக்கு பிறகு டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிடத்தில் மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பாஜக கட்சி வேட்பாளர்கள் ஏப்.13ம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மேயர் தேர்தலில் பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ் வாக்களித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தேர்தல் நடந்து வருகிறது. 7 பாஜக எம்பிக்களும் மேயர் பதவிக்கு வாக்களித்துள்ளோம், பின்னர் நாங்கள் துணை மேயருக்கும் வாக்களிப்போம். பாஜகவின் மேயர் மற்றும் துணை மேயர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆம் ஆத்மியின் கீழ் உள்ள எம்.சி.டி.யின் செயலற்ற தன்மையை தொடர விடமாட்டோம்" என்றார்.
தேர்தலின் தாமதமான திருப்பமாக, காங்கிரஸ் கவுன்சிலர் சபிலா பேகம், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களிப்பதாகக் கூறி கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். சபிலாவின் கணவர் அவரது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். சபிலா பேகம், 2022ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.