டெல்லி மேயர் தேர்தல்: 3 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் திரில் வெற்றி
|டெல்லி நகரின் தூய்மைக்காக பணியாற்றுவதே என்னுடைய முன்னுரிமை என மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற கிச்சி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடக்கவிருந்தது. இந்த மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் ஏப்ரல் 13-ந்தேதியே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். எனினும், பல்வேறு காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள முனிசிபல் மாநகராட்சி கட்டிடத்தில் மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக மகேஷ் குமார் கிச்சி (தேவ் நகர் வார்டு) போட்டியிட்டார். பா.ஜ.க. வேட்பாளராக கிஷன் லால் (ஷகுர்பூர் வார்டு) போட்டியிட்டார். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன.
இதில், மொத்தமுள்ள 265 வாக்குகளில், கிச்சி 133 வாக்குகளை பெற்றார். லால் 130 வாக்குகளே பெற்றார். 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால், 3 வாக்குகள் வித்தியாசத்தில் கிச்சி திரில் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி நகரின் தூய்மைக்காக பணியாற்றுவதே என்னுடைய முன்னுரிமை என வெற்றி பெற்ற கிச்சி கூறியுள்ளார்.