பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
|ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார்.
புதுடெல்லி,
டெல்லியில், முதல்-மந்திரி அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அதில், உள்துறை, போக்குவரத்து, நிர்வாக சீர்திருத்தம், தகவல் தொழில்நுட்பம், பெண்கள், குழந்தைகள் மேம்பாடு போன்ற முக்கிய இலாகாக்களின் மந்திரியாக இருந்தவர் கைலாஷ் கெலாட்.
இவர், நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். தனது மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்-மந்திரி அதிஷி ஏற்றுக்கொண்டார். மேலும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், கெஜ்ரிவாலை கைலாஷ் கெலாட் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய டெல்லி முன்னாள் மந்திரி கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்து கொண்டார். மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தயாராகி வரும் நிலையில், கைலாஷ் கெலாட்டின் விலகல், ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.